ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,160 பதவிகளுக்கு நாளை வாக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,160 பதவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வ செய்யப்பட்டனர்.

Update: 2021-10-07 17:21 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,160 பதவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வ செய்யப்பட்டனர்.

கணினி குலுக்கல் முறையில் தேர்வு 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற இருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 757 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் சாந்தா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

அப்போது தேர்தல் பார்வையாளர் கூறியதாவது:-

6,203 அலுவலர்கள்

அரக்கோணம், காவேரிபாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாளை மறுநாள் (நாளை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 232 வாக்குச்சாவடி மையங்களில் 1,872 வாக்குச்சாவடி அலுவலர்களும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 120 வாக்குச்சாவடிகளில் 1,003 வாக்குச்சாவடி அலுவலர்களும், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் 209 வாக்குச்சாவடிகளில் 1,720 வாக்குச்சாவடி அலுவலர்களும், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் 196 வாக்குச்சாவடிகளில் 1,608 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 757 வாக்குச்சாவடி மையங்களில், 6 ஆயிரத்து 203 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். 

இவர்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு நாளை (இன்று) நடைபெறும் 3-ம் கட்ட பயிற்சி வகுப்பில் பணி ஆணைகள் வழங்கி வாக்குப்பதிவு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

1,160 பேர் போட்டி

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 4 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 172 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. வெப்கேமரா மூலம் கண்காணிப்பு  வீடியோ கேமரா மூலம் கண்காணிப்பு ஆகிய  ஏற்பாடுகள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பு பணிகளுக்காக 1,940 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்ட தேர்தலில் 7 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 40 பேரும், 71 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 310 பேரும், 143 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 504 பேர், 939 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,523 பேர் என மொத்தம் 1,160 பேர் போட்டியிடுகின்றனர்.

3,68,378 வாக்காளர்கள்

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 935 வாக்காளர்களும், நெமிலி ஒன்றியத்தில் 99 ஆயிரத்து 815 வாக்காளர்களும், சோளிங்கர் ஒன்றியத்தில் 98 ஆயிரத்து 7 வாக்காளர்களும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 51 ஆயிரத்து 621 வாக்காளர்களும் ஆக மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 378 வாக்காளர்கள் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் வாக்களிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட தகவலியல் அலுவலர் ஹரிஹரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கென்னடி, பாஸ்கரன், ரவி, குமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், தேர்தல் நடத்தும் அலுவலர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்