மழை காரணமாக 40 டன் நெல் சேதம் விவசாயிகள் கவலை

மழை காரணமாக 40 டன் நெல் சேதம் விவசாயிகள் கவலை

Update: 2021-10-07 17:02 GMT
பொள்ளாச்சி

தொடர் மழையின் காரணமாக 40 டன் நெல் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். 

மழைநீரில் மூழ்கியது 

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் காரப்பட்டி, பெரியணை, பள்ளி விளங்கல், வடக்கலூர், அரியாபுரம் ஆகிய 5 கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 

இதன் காரணமாக முதல் போகத்திற்கு 3,600 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது காரப்பட்டி, குளப்பத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை நடை பெற்று வருகிறது. அரசு மையத்தில் நெல் கொள்முதல் செய்யப் படுகிறது.

40 டன் நெல் சேதம்

இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நெல் சாகுபடி செய்யப்பட்டு 3600 ஏக்கரில், தற்போது வரை 500 ஏக்கர் வரை அறுவடை செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 3100 ஏக்கர் நெற்கதிர்களும் அறுவடைக்கு தயாராக உள்ளது. தொடர் மழையினால் வயலில் மழைநீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி நாசமாகி உள்ளன. 40 டன் நெல் சேதமாகி உள்ளது. 

இழப்பீடு வேண்டும் 

ஏற்கனவே வேலை ஆட்கள் கூலி உயர்வு, உரம் விலை, நெல் அறுவடை எந்திரம் வாடகை கட்டணம் உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். 17 சதவீதம் வரை ஈரப்பதம் இருந்தால் தான் கொள்முதல் மையத்தில் எடுத்து கொள்கின்றனர். 

வைக்கோல் ஈரப்பதமாக இருப்பதால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவசாயிகளின் நிலையை கருத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்