தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-07 16:58 GMT

பஸ் வசதி வேண்டும்

மதுக்கரை அருகே உள்ள மயிலேறிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பள்ளி கிராமத்துக்கு 33 பிசி என்ற டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கிணத்துக்கடவு, வழுக்குப்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வசதியாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அந்த பஸ் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
கல்பனா, மாம்பள்ளி.

தெருவிளக்கு அமைக்கப்படுமா?

  கோவை-சத்தி ரோட்டில் உள்ள டெக்ஸ்டூல் பாலம் கீழ்புறத்தில் சர்வீஸ் சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் அதிகமாக இருப்பதால் அந்த பாதையை பயன்படுத்தி வருபவர்கள் பயத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
  துரைசாமி, கணபதிபுதூர்.

ஆபத்தான மின்கம்பம்

  கோவை சிட்கோ பேஸ் 2 பகுதியில் ஒரு வீட்டின் அருகே அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழக்கூடிய நிலையில் உள்ளது. எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு அந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
  பாண்டியன், சிட்கோ.

தெருநாய்கள் தொல்லை

  கோவை வடவள்ளி காமராஜ் வீதியில் தெருநாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த தெரு நாய்களின் தொல்லைக்கு அளவே இல்லை. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஜெகதீசன், வடவள்ளி.

கழிவுநீர் தேங்கும் அவலம்

  கோவை உக்கடம் கரும்புக்கடை, ஜி.எம். நகரில் அடிப்படை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. அத்துடன் மழை நேரத்தில் மழைநீரும் தேங்குவதால் தெருக்கள் சேறும் சகதியுமாக இருப்பதால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு அடிப்படை வசதி செய்ய வேண்டும்.
  இஸ்மாயில், கரும்புக்கடை

பார்க்கிங் வசதி

  கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையோரம் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாமல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் எனவே வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி செய்து தரவேண்டும்.
  கணேசன், கூடலூர்.

காட்டுப்பன்றிகள் நடமாட்டம்

  கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவல கம், கோர்ட் வளாகம் உள்பட நகரின் முக்கிய சாலைகளில் காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதுடன், இவை பொதுமக்களை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
  ஆஷிக் அலி, கோத்தகிரி.

குவிந்து கிடக்கும் குப்பை

  கிணத்துக்கடவு அரசு பள்ளி அருகே குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. அவை முறையாக சுத்தம் செய்யப்படாததால், காற்றில் பறக்கிறது. மேலும் அங்கு துர்நாற்றமும் அதிகமாக வீசுகிறது. அதுபோன்று அந்த சாலையில் தெருவிளக்கு வசதியும் இல்லை. எனவே இந்த வசதியை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
  கோபாலகிருஷ்ணன், கிணத்துக்கடவு.

நூலகம் வேண்டும்

  ஊட்டி நகரத்தின் மற்றொரு பெரிய நகராக காந்தல் பகுதி விளங்குகிறது. இங்கு பொது நூலகம் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், இளைஞர்கள் புத்தகம் படிக்க முடியவில்லை. எனவே இங்கு நூலகம் அமைத்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும். அதை செய்ய வேண்டும்.
  ரவி, காந்தல்.

குண்டும் குழியுமான சாலை

  கோவையை அடுத்த கோவைப்புதூர் 91-வது வார்டு தொட்ட ராயன் கோவில் வீதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சில நேரத்தில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
  மகேந்திரன், கோவை.

குப்பைகளால் துர்நாற்றம்

  கோவை அருகே உள்ள கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் அந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.
  இளங்கோவன், கீரணத்தம்.

மேம்பாலத்தில் அத்துமீறல் 

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து செல்பி எடுப்பது, புகைப்பிடிப்பது போன்ற அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிலர் மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் ஏறி நின்று செல்பி எடுக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அங்கு நிற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வின், கோவை. 

மேலும் செய்திகள்