ரங்கசாமியை விமர்சிப்பதை நாராயணசாமி நிறுத்த வேண்டும்

முதல்-அமைச்சர் ரங்கசாமியை விமர்சிப்பதை நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-10-07 16:52 GMT
புதுச்சேரி, அக்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியை விமர்சிப்பதை நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோர்ட்டு கண்டனம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பு கடந்த கால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியின் அலங்கோலமான செயலுக்கு கிடைத்த அவமானமாகும். தி.மு.க., காங்கிரஸ் 5 ஆண்டுகால கூட்டணி ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலையே நடத்தாமல் கிடப்பில் போட்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளாட்சி தேர்தல் பற்றி  பேசுவது நகைப்பாக உள்ளது.
தங்களது ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சிக்கான வார்டுகளை பிரித்து மறுசீரமைப்பு பணி செய்ததில் மிகப்பெரிய குளறுபடி செய்ததால் இப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமாக கோர்ட்டின் கண்டனம் புதுச்சேரிக்கு ஏற்பட்டுள்ளது. 
விமர்சிப்பதை நிறுத்தவேண்டும்
முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடமும், கவர்னரிடமும் ஒரு இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பதால் கடந்த 5 மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 
இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த கட்சி தடையாக இருந்தாலும் அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். 
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
பேட்டியின்போது பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நிர்வாகிகள் அன்பழக உடையார், பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்