கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை கலெக்டர் திறந்து வைத்தார்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ 1 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார்.;
கடலூர்,
ஆக்சிஜன் உற்பத்தி ஆலை
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து 2 மற்றும் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் கொரோனா நோயாளிகளின் உயிரை காக்க பிரதமர் நரேந்திரமோடி தனது பிரதமர் நிவாரண நிதி மூலம் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டன.
அதன்படி கடலூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 1000 லிட்டர் திறன் கொண்ட ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நிறுவப்பட்டது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலை 1 நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜனை காற்றில் இருந்து உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.
கலெக்டர் திறந்து வைத்தார்
இதை நேற்று கடலூர் மாவட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அர்ப்பணித்தார். இதையடுத்து கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை திறந்து, இயக்கி வைத்தார்.
இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சாய்லீலா, தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், டாக்டர் பரிமேலழகர், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி.பெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 224 படுக்கைகளும், 350 ஆக்சிஜன் குழாய் இணைப்புகளும் உள்ளது. 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் நிலையம் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக திறக்கப்பட்ட 1000 லிட்டர் ஆக்சிஜன் ஆலை மூலம் ஒரே நேரத்தில் 64 செயற்கை சுவாச கருவிகளுக்கு நிமிடத்திற்கு 15 லிட்டர் என்ற அளவில் ஆக்சிஜன் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
6 அரசு ஆஸ்பத்திரிகளில்...
இது பற்றி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், தற்போது திறக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இருந்து, ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் கூடுதலாக 200 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். இதனால் எப்போதும் ஆக்சிஜன் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 6 அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்பட உள்ளது என்றார்.