பெண்ணாடம் அருகே பரிதாபம் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை சாவு
பெண்ணாடம் அருகே சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;
பெண்ணாடம்,
சூடான சாம்பார்
பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், கிரிஷ்(வயது 5) என்ற மகனும், கிருபாஸ்ரீ(1½) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மணிகண்டன் தனது மனைவியிடம் வயலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு தயார் செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து சாப்பாடு மற்றும் சாம்பார் ஆகியவற்றை தயார் செய்த தனலட்சுமி பெரிய பாத்திரத்தில் ஊற்றி சமையல் அறையில் வைத்தார். இதில் சாம்பார் கொதிக்க கொதிக்க இருந்தது.
உடல் வெந்து...
இந்த நிலையில் தனலட்சுமி அடுப்பில் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது சமையல் அறையில் விளையாடிய கிருபாஸ்ரீ சூடாக இருந்த பாத்திரத்தை பிடித்து இழுத்தாள். இதில் எதிர்பாராதவிதமாக கிருபாஸ்ரீ சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்து விட்டாள். இதில் குழந்தையின் உடல் வெந்து போனது. குழந்தை வலியால் அலறியதை கேட்டு ஓடிவந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருபாஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் கிருபாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்ததாள். இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 1½ வயது பெண் குழந்தை சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.