வேப்பூர் அருகே மரத்தில் வேன் மோதல்; 38 பேர் படுகாயம்
வேப்பூர் அருகே மரத்தில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 38 பேர் படுகாயமடைந்தனர்.;
வேப்பூர்,
பிறந்தநாள் விழாவில் பங்கேற்க...
விருத்தாசலம் அடுத்த தெற்கு வெள்ளூரை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனது பேரனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை உறவினர்கள் 35-க்கும் மேற்பட்டோருடன் ஒரு வேனில் வேப்பூர் அடுத்த வடகராம்பூண்டிக்கு புறப்பட்டார். வேனை ஊ.மங்கலத்தை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 27) என்பவர் ஓட்டினார். வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 3 வயது சிறுவன் சாலையின் குறுக்கே ஓடினான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். அந்த சமயத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
38 பேர் படுகாயம்
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தெற்கு வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்ராஜ் (17), பாக்கியலட்சுமி (36), சங்கீதா (50), சிவகுமார் (35), ராணி (40), ராஜகிளி (40), சாந்தி (52, சுகன்யா (29), செல்வி (35), செல்வகுமார் (35), வீரலட்சுமி (3), சஞ்சய் (6) உள்ளிட்ட 36 பேரும், மேலும் சாலையோரம் துணி துவைத்துக் கொண்டிருந்த கண்டப்பங்குறிச்சியை சேர்ந்த வெங்கடேஸ்வரி (22) சாலையை கடக்க முயன்ற ஹரிஹரசுதர்சன்(3) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 38 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய 12 பேர் மேல்சிகிச்சைக்காக கடலூர், முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.