தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்தொடங்கப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை கனிமொழி எம்.பி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மூலம் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கருவிகள் வழங்கப்பட்டன. இந்த கருவிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த கருவி வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை மருத்துவதுறையில் பயன்படுத்தும் வகையில் 93 சதவீதம் தூய்மையான ஆக்சிஜனை தயாரிக்கும். ஒரு நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் பெற்றது. இந்த கருவியில் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆக்சிஜன் தயாரிக்க தேவையான ரசாயணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை நேரடியாக நோயாளிக்கு கொடுக்கவோ அல்லது மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களில் நிரப்பியோ பயன்படுத்தலாம்.
தொடக்க விழா
இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, கொரோனா அதிகரித்து இருந்த போது, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, அதனை சமாளிக்க அனைவரும் பாடுபட்டோம். ஒவ்வொரு நாளும் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் அத்தனை பேரும் தவித்துக் கொண்டு இருந்தீர்கள். இன்று மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தந்து உள்ளார்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் சுமார் 93 சதவீதம் சுத்தமான ஆக்சிஜனை வழங்கக்கூடியது. 3-வது அலை வரக்கூடிய அபாயம் உள்ளது என்று கூறப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்த தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அனைவருக்கும் சிறிய அச்சம் உள்ளது. இந்த சூழலில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் வந்து இருப்பது வாய்ப்பாக அமைந்து உள்ளது. கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்தி, தமிழகத்தில் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பை குறைக்க முடியுமோ, அதனை செய்து கொண்டு இருக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், துணை கண்காணிப்பாளர் குமரன், கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் கலைச்செல்வன், பிச்சாண்டி, ஓய்வு பெற்ற தாசில்தார் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
200 படுக்கைகளுக்கு...
பின்னர் டீன் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு உ்ளள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை எடுத்து 93 சதவீதம் தூய்மையான ஆக்சிஜனாக மாற்றும். இது மகளிர், மகப்பேறு மற்றும் குழைந்தைகள் வார்டு அருகே அமைக்கப்பட்டு உள்ளது. மின்சாரத்தின் உதவியுடன் இந்த எந்திரம் இயங்கும். மின்சாரம் தடைபடும் போது, ஜெனரேட்டர் மூலம் இயங்கும். இந்த ஜெனரேட்டர் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் வார்டில் உள்ள 200 படுக்கைகளுக்கு வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன என்று கூறினார்.