பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஆர்வமாக ஓட்டு போட்ட வாக்காளர்கள்
பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.;
ஆலந்தூர்,
சென்னை புறநகர் பகுதிகளான பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூவரசம்பட்டு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
பெரும்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டார். அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வாக்குப்பதிவு குறித்து கேட்டறிந்த அவர், ஓட்டு போட வரிசையில் காத்திருந்தவர்களிடம் பூத் சீலிப் இருக்கிறதா? என்பதை கேட்டு வாங்கி பார்த்தார்.
திரிசூலம், முடிச்சூர், நன்மங்கலம், வேங்கைவாசல் உள்பட பல ஊராட்சிகளில் வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுச்சீட்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. 8-வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கல்யாணியின் பெயர் மற்றும் சின்னம் ஓட்டுச்சாவடிகளுக்கு வெளியே ஒட்டப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களை முற்றுகையிட்டனர். அவர்களை சேலையூர் போலீசார் சமாதனம் செய்தனர். பின்னர் ஓட்டுச்சாவடிக்கு வெளியே அவரது பெயர் மற்றும் சின்னத்தை ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர்.
கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், முடிச்சூர் உள்பட பல ஊராட்சிகளில் மாலை 5 மணிக்கு பிறகு பெண்கள் மற்றும் ஆண்கள் என ஏராளமானவர்கள் வாக்களிக்க குவிந்தனர்.
இதனால் 6 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி, இரவு வரை அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.