திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.20 லட்சம் குட்கா சிக்கியது; 3 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண் குமார் கொடுத்த பிரத்தியேக தொலைபேசி எண்ணுக்கு நேற்று முன்தினம் பொன்னேரி உட்கோட்டம் சோழவரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் ரகசியமாக கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக 3 பேர் ஒரு காரில் பொருட்களை ஏற்றி கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த காரை திடீரென சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் இருப்பதை கண்டு அந்த காரையும் குட்கா பொருட்களையும் கைப்பற்றினார்கள். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியதாக திருவள்ளூரை அடுத்த பாக்கம் புலியூர் காலனி பகுதியை சேர்ந்த ஓம்பிரகாஷ் (வயது 28), பிரகாஷ் ( 31), சோழவரம் காந்திநகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த புருஷோத்தமன் ( 50) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலியூர் காலனியில் அடகு கடை நடத்தி வருவதும், அவர் மீது ஏற்கனவே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பிரகாஷ், புருஷோத்தமன் ஆகியோர் மீதும் ஏற்கனவே தலா 2 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சோழவரம் காந்திநகர் ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்த புருஷோத்தமனின் வீட்டில் நடத்திய சோதனையில் அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா பொருள்களையும் கைப்பற்றினர். மொத்தமாக ரூ. 20 லட்சம் குட்கா கைப்பற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களின் பழக்கத்தை அறவே ஒழிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் செயலில் ஈடுபடுவது பற்றி தெரிய வந்தால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொலைபேசி எண் 6379904848 என்ற பிரத்தியோக எண்ணில் தொலைபேசி மூலமாகவோ வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.