செல்போனை வாங்கி விற்பதில் நண்பர் மோசடி: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனை வாங்கி விற்பதில் நண்பர் மோசடி செய்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளுர்,
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், அழகப்பன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் மகேந்திரன் (வயது 18). இவர் சென்னை அண்ணனூர் பகுதியிலுள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக பழைய செல்போன்கள் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மகேந்திரன் தனது நண்பர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்து செல்போன் ஒன்றை வாங்கித் தருமாறு கூறியுள்ளார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட நண்பர் செல்போனை வாங்கி தராமல் மோசடி செய்து தலைமறைவாகி விட்டார்.
இதனால் மனமுடைந்த மகேந்திரன், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வாங்கி தருவதாக கூறி சக நண்பர் பண மோசடியில் ஈடுபட்டதால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.