திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை, பணம் கொள்ளை
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் வாணி தெருவில் வசித்து வருபவர் தீபன் சக்கரவர்த்தி. இவர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுதா பிரியா. தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
தம்பதிகள் இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் பணி முடிந்து மாலை 5 மணிக்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
திருட்டு சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தீபன் சக்கரவர்த்தி புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.