ஒரத்தூர் நீர்த்தேக்கம் பகுதியில் ஏரிக்கரை உடைந்து 25 ஏக்கர் நெற்பயிர் சேதம்
ஒரத்தூர் நீர்த்தேக்கம் பகுதியில் ஏரிக்கரை உடைந்து 25 ஏக்கர் நெற்பயிர் சேதம் அடைந்தது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் அடையாற்றின் கிளை நதியான ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டு முடிவடையாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக ஏரியின் கரை உடைந்து 25 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் நீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:-
நீர்த்தேக்க பகுதியின் அருகே உள்ள ஏரியின் கரையை முறையாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காததால் கரை உடைந்து விவசாய நிலங்களுக்கு உள்ளே தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதனிடையே விளை நிலங்களில் தண்ணீர் புகுந்த பகுதிக்கு காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சிறு மழைக்கே கரை உடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று நீர்த்தேக்கம் மற்றும் கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் ஏரிக்கரை உடைந்தது குறிப்பிடத்தக்கது.