சென்னை விமான நிலையத்தில் ரூ.32½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 675 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சக்திகுமார் கிருஷ்ணசாமி (வயது 29) என்பவர் மீது சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகம் கொண்டு அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 4 துண்டு தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.32 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள 675 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சக்திகுமார் கிருஷ்ணசாமியை கைது செய்த அதிகாரிகள், மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.
அதேபோல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது டெல்லியை சேர்ந்த ஒருவரின் பெயரில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்டு இருந்த 7 பாா்சல்களை பிரித்து பாா்த்த போது அதில் போதை மாத்திரைகள் இருந்தன. அதில் இருந்த 10 ஆயிரத்து 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலி முகவரியில் இந்த போதை மாத்திரை பாா்சல்களை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற டெல்லியை ேசர்ந்த நபரை தேடி வருகின்றனா்.