சொகுசு கப்பலில் போதை விருந்து: போதைப்பொருள் விற்பனையாளர் கைது
சொகுசு கப்பல் போதை விருந்து சம்பவத்தில் மேலும் ஒரு போதைப்பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். கைதானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
மும்பையில் இருந்து கோவாவுக்கு சமீபத்தில் சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து 25-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் சென்றனர். நடுக்கடலில் சென்றபோது போதை விருந்து நடந்தை கண்டறிந்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும் ஒருவர் ஆவார். கைது செய்யப்பட்ட 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதன்படி கப்பலில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் மேலும் பொதைபொருள் விற்பனையாளரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர். அவர் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதன்மூலம் ஆரியன் கானையும் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கப்பலில் நடத்திய சோதனையில் 13 கிராம் கொகைன், 5 கிராம் எம்.டி., 21 கிராம் சரஸ் மற்றும் 22 போதைமாத்திரைகள், ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சிக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்யன் கான் உள்ளிட்டவர்களின் காவல் முடிவதால் இன்று (வியாழக்கிழமை) அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.