ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கிய ரசாயன கழிவுநீர் - விவசாயிகள் அதிர்ச்சி
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் கர்நாடக தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் நுரை பொங்க வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓசூர்,
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 707 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையில் 41.83 அடி நீர் இருப்பு உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 640 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகள் தேக்கி வைத்துள்ள ரசாயன கழிவுகள் தொடர்ந்து ஆற்றில் வெளியேற்றப்பட்டுவருகிறது.
இந்த ரசாயன கழிவு நுரைகள் ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதிகளில் குவியல் குவியலாக நுரை பொங்கி குவிந்து காணப்படுகின்றது. இதனிடையே கர்நாடக தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவதால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, கடந்த ஆண்டு தமிழக கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்றில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.