நெல்லை-தென்காசி உள்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 74 சதவீதம் வாக்குப்பதிவு
74 சதவீதம் வாக்குப்பதிவு
நெல்லை:
நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்தல் பணிகள்
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு ஆயிரத்து 166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர்.இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதல்கட்ட தேர்தல்
இதன் காரணமாக 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் இருந்தனர்.
இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 662 இடங்களுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று அமைதியாக நடைபெற்றது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்ைப, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர் மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 10 யூனியன்களில் இந்த தேர்தல் நடந்தது.
இங்கு முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று முன்தினமே அந்தந்த யூனியன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் தேர்தல் பணியாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்றனர்.
நெல்லை மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தலுக்காக 621 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு
இந்த நிலையில் முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் திறந்து காண்பிக்கப்பட்டது. பின்னா் சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலையிலேயே வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக ஆர்வமாக வந்தனர். வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ததுடன், சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வாக்காளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து வந்தனர்.
பின்னர் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றை காண்பித்து தங்களது வாக்குகளை வாக்குச்சீட்டு முறையில் பதிவு செய்தனர். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டது. இளம் வாக்காளர்களும் தங்களது வாக்குகளை உற்சாகமாக பதிவு செய்தனர். கிராம மக்களும் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டுச் சென்றனர். வயதானவர்களை அந்தந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தூக்கி வந்து ஓட்டு போட வைத்தனர். மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஓடக்கரை சி.எம்.எஸ். இவாஞ்சலிக்கல் தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
4 வண்ண ஓட்டுச்சீட்டுகள்
மேலும், இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்காளர்களும் 4 ஓட்டுகள் போட்டனர். அதாவது மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு ஓட்டு போட்டனர். வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்திலும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டு சிவப்பு நிறத்திலும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டு பச்சை நிறத்திலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டு மஞ்சள் நிறத்திலும் என 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டுகள் இருந்தன. ஒவ்வொரு வாக்காளர்களும் 4 ஓட்டுகள் போட்டதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் தாமதம் ஆனது.
வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் ெதாலைவில் நிற்க அனுமதிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் வாடகை அல்லது சொந்த வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப் கேமரா மூலம் தேர்தல் அலுவலர்கள் கண்காணித்தனர்.
முதல்கட்ட தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வாக்குச்சாவடியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அரியகுளம், புத்தனேரி உள்ளிட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார்.
தென்காசி
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குச்சாவடிகளில் ஏராளமான கிராம மக்கள் ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றினார்கள். இங்கும் தேர்தலை வெப் கேமரா மூலம் தேர்தல் அலுவலர்கள் கண்காணித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்த மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரவு வரை ஓட்டுப்பதிவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வாக்காளர்கள் மாலை 5 மணி வரை வாக்குகளை பதிவு செய்தனர். 5 மணிக்கு பிறகு கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மேலும், பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னரும் 145 வாக்காளர்கள் ஓட்டு போட காத்திருந்தனர்.