குளத்தில் மூழ்கிய கொத்தனார் பிணமாக மீட்பு
மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கிய கொத்தனார் பிணமாக மீட்கப்பட்டார். தேடும் பணியின் போது மேலும் ஒருவரின் உடல் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கிய கொத்தனார் பிணமாக மீட்கப்பட்டார். தேடும் பணியின் போது மேலும் ஒருவரின் உடல் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொத்தனார் மாயம்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் சேரியாவட்டத்தை சேர்ந்தவர் சாம் ஸ்டான்லி. இவரது மகன் ராபர்ட் சாம் (வயது 31). இவர் மாலத்தீவில் கொத்தனாராக வேலை பார்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்தஊர் திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் ராஜாதாஸ் (31), ஜெனோ (38) ஆகியோருடன் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியகுளத்தின் கரைக்கு சென்றார். அங்குள்ள எழுத்திட்டான்பாறை பகுதியில் நண்பர்கள் 3 பேரும் குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென ராபர்ட் சாம் மாயமானார்.
தேடுதல் பணி
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும், நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் மாயமான ராபர்ட் சாமை தேடினர்.
ஆனால் அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
உடல் மீட்பு
இந்தநிலையில் நேற்று காலை 2-வது நாளாக அந்த குளத்தில் தீயணைப்பு வீரர்களின் தீவிர தேடுதலுக்கு பிறகு ராபர்ட் சாமின் உடல் மீட்கப்பட்டது.
அப்போது, எழுத்திட்டான்பாறை பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொருவரின் உடல் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் அந்த உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குளத்தில் அடுத்தடுத்து பிணங்கள் மீட்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு சென்றவர்
இதையடுத்து மணவாளக்குறிச்சி போலீசார் பிணமாக மிதந்த மற்றொருவரை பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், திங்கள்நகர் பாசிக்குளத்தங்கரையை சேர்ந்த சுயம்பு என்பவரது மகன் சிவகுமார் (28) என்பதும், அவர் கொத்தனார் என்பதும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவர், பெரியகுளத்தன்கரையில் உள்ள ஒரு கோவில் விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் சிவகுமார் குளத்தில் இறங்கி குளித்த போது, தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
அதைதொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் மூழ்கி மாயமான கொத்தனாரை தேடிய போது, மேலும் ஒருவர் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.