ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 33 பவுன் நகைகள் திருட்டு
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 33 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்
திருவெறும்பூர்
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் திருவளர்ச்சிபட்டி பிரசாத் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 60). இவர் ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர் ஆவார். இவரது மனைவி விமலா ரேச்சல். ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பெங்களூருவில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக, சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சுந்தர்ராஜன் மனைவியுடன் பெங்களூருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், அதுபற்றி சுந்தர்ராஜனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதுபற்றி சுந்தர்ராஜன் போனில் நவல்பட்டு போலீசாரிடம் புகார் தெரிவித்ததோடு, தனது வீட்டின் பீரோவில் தங்கக்காசுகள், மோதிரங்கள் உள்பட மொத்தம் சுமார் 33 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பாத்திரம், வெள்ளி குத்துவிளக்கு ஆகியவை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
நகைகள் திருட்டு
அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார், சுந்தர்ராஜனின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த பொருட்களை காணவில்லை. இதனால் பீரோவில் இருந்த அனைத்து பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சுந்தர்ராஜன் வீட்டிற்கு போலீசார் வேறு ஒரு பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.