புகார் பெட்டி

தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

Update: 2021-10-06 20:37 GMT
மோசமான சாலையால் அவதி

மதுரை மாநகராட்சி 56-வது வார்டு மேலஅனுப்பானடி சரவணா நகர் ரோடு, மாருதிநகர், கங்காநகர், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக தரமான சாலையை அமைக்க வேண்டும்.
தயாநக்கீரன், சரவணாநகர், மதுரை.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா? 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் பாரதிநகர் காலனி முகவூர் முதல்நிலை ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதன் காரணமாக இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கருத்தபாண்டியன், முகவூர். 

குண்டும், குழியுமான சாலை 

ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியில் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். 
முகம்மது இஸ்மாயில், இளையான்குடி. 

தெருவிளக்கு எரியவில்லை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மேட்டுப்பட்டி கிராமத்தில் 3 மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும், திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, தெரு விளக்குகளை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, மேட்டுப்பட்டி.
மின் மயானம் தேவை 
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு விளாங்குடியில் மின்மயானம் வசதி இல்லை. இதன் காரணமாக இ்ப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே, இப்பகுதியில் மின்மயானம் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மயில்சாமி செம்பருத்தி, விளாங்குடி. 

துர்நாற்றம் 

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் மேற்கு தெருவில் கோட்டைகுளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குளம் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது குளத்தில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குளத்தை தூர்வார மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
சீனிஜலாலுதீன், பெரியபட்டினம்.

தேங்கி நிற்கும் மழைநீர் 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா சண்டுநாதபுரம் ஊராட்சி மேற்கு 2-வது வீதியில் உள்ள சாலைகளில் மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மேலும், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
செந்தில்குமார், தேவகோட்டை. 

ஆபத்தான தொட்டி 
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவினிப்பட்டி ஊராட்சி நா.கோவில்பட்டியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது தொட்டி மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. இதனை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
விஜய், நா.கோவில்பட்டி. 

சுகாதார சீர்கேடு 
மதுரை மதிச்சியம் போலீஸ் நிலையத்தின் பின்பகுதி, முத்து தெரு-சப்பாணி தெரு சந்திப்பில் ஒரு குப்பைத் தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டி எப்போதும் நிறைந்த வண்ணம் உள்ளது. இதனால், குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் சாலைகளில் சிதறி கிடப்பதால் சுகாதார சீர்கேடாக உள்ளது. நோய் பரவும் நிலை ஏற்படுகிறது. எனவே அங்கு கூடுதலாக குப்பை தொட்டிகள் வைக்கவும், குப்பைகளை முறையாக அள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி சுந்தரராசன், மதிச்சியம்.

மோசமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கிடாதிருக்கை-கொண்டுலாவி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு சுமார் 2000 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.. அவசர நிலை ஏற்படும்போது வாகனங்களில் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு அந்த சாலையை விரைவாக சரிசெய்ய வேண்டும்.
முருகன், கிடாதிருக்கை.

மேலும் செய்திகள்