மதுரை மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய 2 பேர் கைது

மதுரையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது

Update: 2021-10-06 20:24 GMT
மதுரை, 

   மதுரையை  சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

ஆபாச படம்

செல்போன் மோகம் அனைத்து தரப்பினரையும் ஆட்டி படைக்கிறது. அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கி உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் நண்பர்கள் போல் பேசி ஒரு சிலர் பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். 
இதன் காரணமாக சைபர் கிரைம் பிரிவில் தற்போது வழக்குகள் அதிகரித்துள்ளன..
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு வாலிபர்கள் 2 பேர் ஆபாச படம் அனுப்பியதை அவர்களது பெற்றோர் கண்டுபிடித்து விட்டனர். உடனே அவர்கள் இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் திலகர்திடல் உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் அந்த வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

2 வாலிபர்கள் கைது

அவர்கள் முதலில் நண்பர்கள் போல் பேசி வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பியவர்கள். அதற்கு மாணவி பதில் அனுப்பியதால், ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியது தெரியவந்தது. இவ்வாறு குறுஞ்செய்தி ஆபாச படம் அனுப்பியது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ஆறுமுகம் (28), முத்துமாலை மகன் மகாராஜா (29) என்பதும், அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீவைகுண்டம் சென்று இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்