அல்லிக்குட்டை ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

அல்லிக்குட்டை ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

Update: 2021-10-06 20:08 GMT
சேலம், அக்.7-
சேலம் அருகே அல்லிக்குட்டை ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
மீன்கள் செத்து மிதந்தன
சேலம் அருகே வீராணம் மெயின்ரோட்டில் அல்லிக்குட்டை ஏரி உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது பெய்த தொடர் கனமழையால் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அல்லிக்குட்டை ஏரியை பராமரிக்கவும், மீன்கள் பிடிக்கவும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று காலை அல்லிக்குட்டை ஏரியில் மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்தன. இதை பார்த்தவுடன் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஜிலேபி, கட்லா போன்ற மீன்கள் ஏரியில் எப்படி செத்து மிதந்தது? என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 
விஷம் கலப்பு?
ஏரி தண்ணீரில் யாரேனும் விஷம் கலந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் பொதுமக்கள் கருதுகிறார்கள். கடந்த 2 நாட்களாக சிறிய வகையான மீன்கள் மட்டுமே செத்து மிதந்ததாகவும், ஆனால் தற்போது பெரிய அளவிலான மீன்கள் செத்து மிதப்பதாகவும் ஏரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஏரியில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே, ஏரியில் மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்