ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் முறையீடு

முன்னாள் அமைச்சர்ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2021-10-06 19:33 GMT
மதுரை, 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அ.தி.மு.க.வினர் இடையே கடந்த மாதம் 24-ந்தேதி மோதல் ஏற்பட்டது. 
இந்த மோதலில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி புகழேந்தி நேற்று காலையில் வழக்குகளை விசாரித்தார். அப்போது மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி முறையிட்டார்.
அப்போது, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோர்ட்டு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். எனவே இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி தரப்பினர் கைதாவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றார்.
அதற்கு நீதிபதி, அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தான் நீங்கள் முறையிட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்