விருதுநகர்
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 45). இவருடன் லாரி டிரைவராக வேலை பார்க்கும் அழகு மூர்த்தி(40) என்பவரும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தியதாக 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்ததன் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்த கண்ணன், அழகு மூர்த்தி ஆகிய இருவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்தவர் முத்துபாண்டி(35). இவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரை செய்ததன் பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி அளித்தார். அதன்பேரில்விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் முத்துப்பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.