திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.69 சதவீதம் வாக்குப்பதிவு. ராணிப்பேட்டையில் 80.89 சதவீதம்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.69 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80.89 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.
திருப்பத்தூர்
ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 78.69 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80.89 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.
78.69 சதவீதம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 4 ஒன்றியங்களில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 54 பேர் வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 79.64 சதவீதமும், கந்திலி ஒன்றியத்தில் 75.31 சதவீதமும், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 79.57 சதவீதமும், திருப்பத்தூர் ஒன்றியத்தில் 80.47 சதவீதமும் வாக்குகள் பதிவானது. 4 ஒன்றியங்களிலும் சேர்த்து 78.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
4 ஒன்றியங்களிலும் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ்தொடர்ந்து அனைத்து வாக்குப் பெட்டிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய 3 ஒன்றியங்களில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆற்காடு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 86 ஆயிரத்து 686 வாக்குகளில் 72 ஆயிரத்து 138 வாக்குகள் பதிவாகியிருந்தது. இது 83.22 சதவீதமாகும். திமிரி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 85 ஆயிரத்து 893 வாக்குகளில் 71 ஆயிரத்து 637 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 83.40 சதவீதமாகும்.
வாலாஜா ஒன்றியத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 786 வாக்குகளில் 99 ஆயிரத்து 189 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 77.62 சதவீதமாகும். இந்த 3 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 3 லட்சத்து 365 வாக்குகளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 964 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 80.89 சதவீதம் ஆகும்.
வாலாஜா ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், வாக்குப்பெட்டிகளிள் வைத்து சீல்வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.