விதை நெல் விடும் பணி மும்முரம்
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக விதை நெல் விடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முத்தூர்
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக விதை நெல் விடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்று வட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
விதை நெல் விடும் பணி
இதன்படி முதல் கட்டமாக கீழ்பவானி பாசன விவசாயிகள் ஐ.ஆர்.20, கோ.ஆர் 50, கோ.ஆர்.51,ஏ.டி.டி.38, சி.ஆர்.1009, டீலக்ஸ் பொன்னி உள்பட பல்வேறு ரக விதை நெல்களை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து தங்களது வயல்களில் நெல் நாற்றுக்களாக மாற்றும் பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.
இதன்படி இப்பகுதி விவசாயிகள் கடந்த 4 நாட்களாக நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடைபெறும் வேளாண் வயல்களில் ஒரு பகுதிகளில் சேற்று வயல் அமைத்து நீரை நிரப்பி அதில் விதை நெல் மணிகளை தூவி விட்டு நெல் நாற்றுக்கள் உற்பத்தி பணிகளை தொடங்கி உள்ளனர்.
விதை நெல் வயல்கள்
மேலும் நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் வயல்களில் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வண்ணம் நீர் நிரப்பி தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நெல் விதைகள் தூவி விட்ட சுமார் 16 நாட்களுக்கு பிறகு நெல் நாற்றுக்கள் பச்சை நிறத்தில் லேசாக முளைத்து மேலே எழும்பி விடும்.
அதன்பின்பு இந்த நெல் நாற்றுகள் மேலும் 20 நாட்களுக்கு பச்சை, பசேலென்று நன்கு வளர்ந்த பிறகு விதை நெல் வயல்களில் இருந்து நெல் நாற்றுக்கள் வெளியே எடுக்கப்பட்டு சேற்று உழவு பணிகள் செய்யப்பட்டு நெல் நடவு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும்.
பலத்த மழை
மேலும் இப்பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அவ்வப்போது பெய்த சாரல், மிதமான, பலத்த மழை நீரினை பயன்படுத்தியும், கீழ்பவானி பாசன கால்வாய் தண்ணீரை பயன்படுத்தியும் நஞ்சை சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக விதை நெல்கள் மூலம் நெல் நாற்றுக்கள் விடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.