உளுந்தூர்பேட்டை அருகே வாக்குச்சாவடி மைய வளாகத்தில் ஆதரவாளர்களுடன் வாக்குசேகரித்த வேட்பாளர்கள் டி ஐ ஜி பாண்டியன் விரட்டியடித்தார்
உளுந்தூர்பேட்டை அருகே வாக்குச்சாவடி மைய வளாகத்துக்குள் ஆதரவாளர்களுடன் புகுந்த வேட்பாளர்களை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையிலான போலீசார் விரட்டியடித்தனர்
உளுந்தூர்பேட்டை
வாக்கு சேகரிப்பு
திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட வண்டிப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சில வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் அனுமதிக்கப்பட்ட இடத்தை கடந்து வாக்குச்சாவடி மைய வளாகத்துக்குள்ளே புகுந்து அங்கு வந்த பொதுமக்களிடம் தாங்கள் போட்டியிடும் சின்னங்களை காண்பித்து வாக்குகளை சேகரித்துக்கொண்டிருந்தனர். இதுபற்றி போலீசாருக்கு புகார்கள் வந்தன.
விரட்டியடிப்பு
இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் வாக்குச் சாவடி மைய வளாகத்தில் ஏராளமானோர் திரண்டு நின்று கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிரடிப்படையினருடன் வாக்குச்சாவடி மைய வளாகத்துக்குள் சென்று வாக்காளர்களை தவிர தேவையில்லாமல் நின்று கொண்டிருந்தவர்களை விரட்டி அடித்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அதிகாரியை நேரில் அழைத்து வாக்காளர்களை தவிர்த்து வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என கண்டிப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.