விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 81.36 சதவீத வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 81.36 சதவீத வாக்குகள் பதிவானது.

Update: 2021-10-06 18:06 GMT
விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. 
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் 13 ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும். இதில் முதல்கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 7 ஒன்றியங்களை உள்ளடக்கிய  16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான  95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 8,574 பேர் என்று மொத்தம் 10,873 பேர் களத்தில் இருந்தனர்.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459  வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

4 நிறத்தில் வாக்குச்சீட்டு

வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,  வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் இருந்தது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் இளம்தலைமுறை வாக்காளர்கள் தொடங்கி வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தங்களது வாக்கை செலுத்தி சென்றனர். 
இதில், ஒரே நேரத்தில் ஒருவாக்காளர் 4 பதவிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் வகையில் 4 வாக்கை செலுத்தினர். இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் என 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்தனர். 
முன்னதாக வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை அளவீடு செய்த பின்னரே வாக்குச்சாவடி மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஆரம்பத்தில் மந்தமாக நடைபெற்ற நிலையில் 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரை விறு, விறுப்பாக நடைபெற்றது. அதன் பிறகு மதிய வேளையில் பொதுமக்களின் வருகை குறைந்ததால் வாக்குப்பதிவு சற்று மந்தமானது. அதன் பின்னர் மாலை 3 மணியில் இருந்து மீண்டும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தது.
தொரவி, கப்பியாம்புலியூர், கயத்தூர், ஒரத்தூர், பில்ராம்பட்டு, ஒட்டம்பட்டு, வடகரைத்தாழனூர், பெரியசெவலை, சரவணம்பாக்கம், கருவேப்பிலைப்பாளையம், ஒட்டனந்தல், ஆனத்தூர், புருஷானூர், வானூர் காலனியில் 2 வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 20 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு பிறகும் வாக்களிக்க முடியாமல் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.

டோக்கன்

பின்னர் அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாக்காளர்களை வரிசையில் ஒழுங்குப்படுத்தி வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அவர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கனில் உள்ள வரிசை எண்ணின்படி வாக்குச்சாவடிக்குள் சென்று தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர். இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைய இரவு 8.30 மணி வரை ஆனது.
அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. 

இத்தேர்தல் பணியில் 2 மாவட்டங்களிலும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு வீடியோ மூலமும் பதிவு செய்யப்பட்டது.

வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைப்பு

தேர்தல் முடிந்ததும் வாக்குப்பெட்டிகளுக்கு தேர்தல் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மைய அறைகள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மைய அறைகள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற ஏதுவாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக் ஆகியோர் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி வெளிமாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் என 5,500-க்கும் மேற்பட்டோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் மொத்தம் 81.36 சதவீத வாக்குகள் பதிவானது. 

மேலும் செய்திகள்