உளுந்தூர்பேட்டை அருகே தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம் தனிவார்டு அமைத்து தர கோரிக்கை

உளுந்தூர்பேட்டை அருகே தனி வார்டு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-10-06 18:03 GMT

உளுந்தூர்பேட்டை

செங்குறிச்சி கிராமம்

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1-வது வார்டு பகுதியில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று காலை ஒன்று திரண்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருவதாகவும், எனவே தற்போது 1-வது வார்டு பகுதியில் வசிக்கும் தங்கள் பகுதியை பிரித்து தனி வார்டு அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் செங்குறிச்சி கிராமத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாகவும், விரைவில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உறுதியளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு வாக்களிக்கச் சென்றனர். 
தனிவார்டு அமைத்து தரக்கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய சம்பவத்தால் செங்குறிச்சி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்