மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருப்பூரில் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருப்பூர்
திருப்பூரில் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மகாளய அமாவாசை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதுபோல் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்கிடையே பொதுமக்கள் கூடும் திருவிழாக்கள், அரசியல் சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தர்ப்பணம்
இதுபோல் மகாளய அமாவாசை வழிபாட்டை வீடுகளில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்கள் பலரும் வீடுகளில் முன்னோர்கள் நினைவாக வழிபாடுகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த மகாளய அமாவாசையில் இறந்த முன்னோர்களுக்கு நீர்நிலைகள் அருகே தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பலர் கலந்துகொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.