மகாளய அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி நேற்று நீர்நிலைகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.;
முருகபவனம்:
மகாளய அமாவாசையையொட்டி நேற்று நீர்நிலைகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மகாளய அமாவாசை
ஆண்டுதோறும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது இந்துக்களின் வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதால் முன்னோர்கள் தங்களின் குலம் செழிக்க நல்ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளான நேற்று திண்டுக்கல்லில் ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
இதையொட்டி திண்டுக்கல் கோட்டை குளம், ஆர்.காலனி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் காலை 6 மணி அளவில் தர்ப்பண வழிபாடுகள் தொடங்கின. இதையொட்டி அங்கு வந்தவர்கள் வரிசையாக அமர்ந்து வாழை இலையில் பச்சரிசி, காய்கறிகள், தேங்காய் பழம், பூக்கள் வைத்தனர். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, அந்த மந்திரங்களை சொல்லி தங்கள் முன்னோர்களை வணங்கி எள், தண்ணீர் விட்டு கற்பூரம் ஏற்றி தர்ப்பணம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தர்ப்பணத்தில் வைத்த பச்சரிசியில் சிறிதளவு வீட்டிற்கு எடுத்து சென்று அதை சமையலில் சேர்த்து விரதத்தை நிறைவு செய்தனர். மேலும் தர்ப்பணம் கொடுத்தவர்களில் பலர் அன்னதானம் வழங்கியதுடன் பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கி உண்ண கொடுத்தனர்.
அணைப்பட்டி வைகை ஆறு
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வைகை ஆற்றில் அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதற்கிடையே மகாளய அமாவாசை தினமான நேற்று காலை கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் மூடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோவில் நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில் மூடப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்களில் பலர் தர்ப்பணம் கொடுக்காமலேயே திரும்பிச்சென்றனர். ஆனால் சிலர் கோவில் முன்பு நின்று வழிபாடு நடத்தினர். பின்னர் வைகை ஆற்றில் இறங்கி புனித நீராடிவிட்டு தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பழனி சண்முகநதி
பழனி சண்முகநதி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். நதிக்கரையோரம் அமர்ந்து வாழை இலையை விரித்து அதில் சாதம், எள், அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள் உள்ளிட்டவற்றை படைத்தனர். பின்னர் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கள் முன்னோர்களை வழிபட்டனர். மேலும் தங்கள் சந்ததி நலம் பெற வேண்டி வழிபாடு செய்தனர். அதேபோல் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் மகாளய அமாவாசையையொட்டி பலர் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கி அவர்களின் ஆசியை பெற்றனர். அந்தவகையில் திருப்பழனி அன்னதானக்குழு சார்பில் பழனி பஸ்நிலையம், நகர் பகுதியில் சாலையோரம் உள்ள முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெளிநாடு வாழ் நண்பர்கள் அமைப்பு சார்பில் பழனி கிரிவீதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமை தாங்கி உணவு, உடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.