பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் ரத்து

பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-10-06 16:57 GMT
பழனி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த திருவிழாவில் காப்புகட்டு, அம்புவில் போடுதல் போன்றவை முக்கிய நிகழ்ச்சிகளாகும். இதில் அம்புவில் போடுதல் நிகழ்ச்சியானது பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள முத்துக்குமார சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி செல்வது வழக்கம். அதேபோல் நவராத்திரி விழாவையொட்டி தினமும் பக்தி கச்சேரி, சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவில் காப்புகட்டு, அம்புவில் போடுதல் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. ஆனால் பூஜைகள் மட்டும் நடைபெற்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசின் நிலையான வழிகாட்டு முறைகள் நடைமுறையில் இருப்பதால் பழனி முருகன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் நவராத்திரி விழாவின் காப்புகட்டு, அம்புவில் போடுதல் நிகழ்ச்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அலங்காரம், வழிபாடுகள், பூஜைகள் மட்டும் நடைபெறும். பூஜை நேரங்களை தவிர்த்து மற்ற வேளைகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அதேபோல் ஆகம விதிப்படி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்