‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-06 16:55 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேறும், சகதியுமாக மாறிய சாலை
நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி, சாலையானது சேறும் சகதியுமாக மாறி விட்டது. தற்போது தசரா திருவிழா நேரம் என்பதால் பூக்கடை மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே போர்க்கால அடிப்படையில் சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொ.பாலகிருஷ்ணன், நெல்லை டவுன்

மின்விளக்கு வசதி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா ராஜாக்கமங்களம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவேங்டநாதபுரம் (சிறுமளஞ்சி) கிராமத்தில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகனங்களின் ஒளியை வைத்து தற்போது வரை அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மின்விளக்குகள் அமைத்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இ.சுந்தர வடிவேல், சிறுமளஞ்சி.

போக்குவரத்துக்கு இடையூறான முள்செடிகள் 

பாளையங்கோட்டை மண்டலம் 28-வது வார்டு குலவணிகர்புரம் வாய்க்கால் வடபுறம் உள்ள மாங்கரை ரோடு தெற்கு பைபாஸ் சாலையில் இருந்து யாதவர் சமுதாயம் வாய்க்கால் பாலம் வரை சாலையின் இருபுறமும் முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இவை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை பதம் பார்க்கின்றன. ஆகையால் முள்செடிகளை அகற்றி பனை விதைகள், மரங்கள் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வி.அந்தோணிராஜ், குலவணிகர்புரம்.

குண்டும், குழியுமான சாலை

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு சாந்திநகர் அருகில் உள்ள கிருபா நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 7 வருடங்களாக சாலை வசதி இல்ைல. குறிப்பாக சீவலப்பேரி ரோட்டில் இருந்து கிருபா நகருக்கு உள்ளே வரும் சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
தட்சிணாமூர்த்தி, கிருபாநகர்.

தெரு விளக்கு வசதி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து கொத்தன்குளம் பஸ்நிறுத்தம் அருகில் தெரு விளக்குகள் இல்லை. அதன் அருகே இளைஞர்களின் விளையாட்டு மைதானமும் உள்ளது. இரவு நேரத்தில் மிகவும் இருட்டாக உள்ளதால் விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. ஆகையால் பஸ்நிறுத்தம் அருகில் தெரு விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குப்பைத்தொட்டி வேண்டும்

நெல்லை டவுன் வலுக்கோடை பஸ்நிறுத்தம் செல்லும் மேல மவுண்ட் ரோட்டில் குப்பைத்தொட்டி இல்லை. இதனால் ரோட்டில் குப்பைகள் கொட்டப்படுவதால் காற்றில் பறந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, அங்கு குப்பைத்தொட்டி வைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கி.பேச்சிமுத்து, நெல்லை டவுன்.

பழுதடைந்த அடிபம்பு

தென்காசி மாவட்டம் வல்லம் கிராமம் கிணற்றடி தெருவில் அடிபம்பு ஒன்று உள்ளது. அந்த அடிபம்பில் தண்ணீர் பிடித்து மக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது அடிபம்பு பழுதடைந்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அப்படியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே, அடிபம்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.சித்ரா, வல்லம்.

காய்ந்த மரம் அகற்றப்படுமா?

திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு நா.முத்தையாபுரம் எல்லப்பன் நாயக்கன்குளம் வழியாக செல்லும் சாலையில் தனியார் தொண்டு நிறுவனம் அருகில் உள்ள மரம் முற்றிலும் காய்ந்து சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்னதாக, அந்த மரத்தை அங்கிருந்து வெட்டி அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மு.தமிழ்பரிதி, திருச்செந்தூர்.

மேலும் செய்திகள்