திண்டுக்கல் காமராஜர் அணை நீர்மட்டம் 18 அடியாக உயர்வு

திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்தது.

Update: 2021-10-06 16:55 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்தது.
காமராஜர் அணை 
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காமராஜர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 23½ அடி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாறு, கூழையாறு ஆகியவற்றின் தண்ணீர் காமராஜர் அணையில் தேக்கப்படுகிறது.இந்த அணையில் இருந்து தினமும் குடிநீர் எடுக்கப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஒருசில கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் திண்டுக்கல் நகருக்கு கடந்த 60 ஆண்டுகளாக, காமராஜர் அணையில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் காமராஜர் அணையின் நீர்மட்டம் 10 அடிக்கு குறைவாகவே இருக்கும்.
18 அடியாக உயர்வு 
ஆனால் இந்த ஆண்டு அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 15 அடிக்கு குறையாமல் இருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 17 அடியாக இருந்தது. இதற்கிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்தது.
இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. அதன்மூலம் அணைக்கு ஓரளவு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நேற்று காமராஜர் அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்தது. மேலும் தொடர்ச்சியாக மழை பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்