அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 27 பேர் அபகரித்த 94 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

தேனி அருகே அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 27 பேர் அபகரித்த 94 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. மேலும் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பான பத்திரப்பதிவை ரத்து செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-10-06 16:45 GMT
தேனி: 


அரசு நிலம் அபகரிப்பு
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர், அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவருடைய உறவினர்களின் பெயருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளின் பினாமிகள் பெயருக்கும் பட்டா வழங்கிய சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  
இதுதொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 5 வருவாய்த்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. 

மேலும் ஒருவர் பணி இடைநீக்கம்
அவ்வாறு முறைகேடாக பட்டா பெற்ற நிலத்தை சிலர் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனையும் செய்துள்ளனர். அத்தகைய வீட்டுமனைகள் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து அரசுக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில் இந்த நிலம் அபகரிப்புக்கு பெரியகுளம் தென்கரை குறுவட்ட நிலஅளவையர் பிச்சைமணி என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவரும் நேற்று முன்தினம் இரவில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால், இந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

94.65 ஏக்கர் மீட்பு 
இதை தொடர்ந்து எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அபகரிக்கப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
முறைகேடாக பட்டா வழங்கியதில் தொடர்புடைய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சில கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 

வருவாய்த்துறையில் பராமரிக்கப்படும் ‘அ' பதிவேட்டில் ஆர்.டி.ஓ. மட்டும் தான் திருத்தம் செய்ய முடியும். அதில் திருத்தம் செய்து தான் இந்த நிலம் அபகரிப்பு நடந்துள்ளது. எனவே, இந்த சம்பவம் நடந்த கால கட்டத்தில் பணியாற்றிய ஆர்.டி.ஓ.க்களுக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது கணினி மூலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் அவருடைய பெயரில் வேறு யாரேனும் திருத்தம் செய்தார்களா? என்பது மேல் விசாரணையில் தெரியவரும்.
தற்போது வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை மீண்டும் அரசு நிலமாக மாற்றிவிட்டோம். முறைகேடாக பட்டா வாங்கிய இடத்தை விலைக்கு வாங்கி சிலர் பத்திரப்பதிவு செய்துள்ளனர். எனவே இந்த நிலம் தொடர்பான பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் 56 ஏக்கர்
அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிம வளங்கள் எடுத்து விற்பனை செய்து உள்ளனர். எவ்வளவு கனிம வளங்கள் எடுக்கப்பட்டுள்ளது என கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு ஒரு மலைக்குன்று இருந்ததாகவும் அதுவும் கரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே 10 ஆண்டுகளுக்கு முந்தைய செயற்கைகோள் புகைப்படத்தை கொண்டு ஆய்வு செய்யப்படும்.
நிலம் அபகரித்தவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பெரியகுளம் சப்-கலெக்டர் மூலமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம்் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் இணைந்து பெரியகுளம் பகுதியில் மேலும் 56 ஏக்கர் அரசு நிலத்தை 42 பேருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அந்த நிலங்களும் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்