நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
நாட்டுக்கோழி வளர்ப்பதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை
நாட்டுக்கோழி வளர்ப்பதாக கூறி ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
நாட்டுக்கோழி வளர்ப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 36). அதே பகுதியில் உள்ள கம்புளியாம்பட்டியை சேர்ந்தவர்கள் சேகர் (39), குமார் (49). இவர்கள் 3 பேரும் இணைந்து கடந்த 2010-ம் ஆண்டு சரளையில் பாஸ் பவுல்டரி பார்ம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை ஆரம்பித்தனர்.
இதில் பொதுமக்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், நாட்டுக்கோழி கொடுத்தும் அதை பராமரிக்க மாதம் ரூ.8 ஆயிரம் கொடுக்கப்படு வதோடு, ஆண்டிற்கு ஊக்கத் தொகையாக ரூ.8 ஆயிரம் தரப்படும் என்றும் அறிவித்தனர்.
ரூ.1¼ கோடி மோசடி
மேலும் வி.ஐ.பி. திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரமும், ஊக்கத்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர் களுக்கு 3 ஆண்டு முடிவில் முழு தொகையும் திருப்பி தரப்படும் என்று அறிவித்தனர்.
இதனை நம்பி ஏராளமானோர் இந்த பண்ணையில் முதலீடு செய்தனர்.
ஆனால் அவர்கள் அறிவித்தப்படி பணம் தராததால் அதிர்ச்சி அடைந்த முதலீடு செய்தவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், 3 பேரும் சேர்ந்து 98 பேரிடம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 98 ஆயிரம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
10 ஆண்டு சிறை
இதுகுறித்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.76 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார்.
மேலும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குமார் விடுவிக்கப்பட்டார். மற்றொரு நபரான பாஸ்கரன் மீது இந்த மோசடி வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.