சாக்கடை கால்வாய்க்குள் பதுங்கிய பிரபல திருடன் கைது
சாக்கடை கால்வாய்க்குள் பதுங்கிய பிரபல திருடன் கைது
பொள்ளாச்சி
போலீசாருக்கு பயந்து சாக்கடை கால்வாய்க்குள் பதுங்கிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
சாக்கடை கால்வாய்க்குள் பதுங்கல்
பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலைய போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றனர். ராஜாமில் ரோடு வழியாக சென்ற போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி சென்றார். போலீசார் அவரை துரத்தி சென்ற போது, அதே பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் சென்று பதுங்கி கொண்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அங்கு சென்று அந்த நபரை வெளியே வருமாறு கூறினார்கள்.
ஆனால் அந்த நபர் சாக்கடை கால்வாயை விட்டு வெளியே வர மாட்டேன் என்றார். இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாக்கடை கால்வாயின் மேல்தளத்தை உடைத்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அதன்பிறகும் அந்த நபர் வெளியே வராமல் அடம் பிடித்தார்.
பிரபல திருடன் கைது
பின்னர் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் நைசாக பேசி சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ஹக்கீம் (வயது 36) என்பது தெரியவந்தது.
மேலும் மார்க்கெட் ரோட்டை சேர்ந்த பிரதீஸ் என்பவரிடம் செல்போனை பறித்து கொண்டு ஓடிய போது போலீசாரை பார்த்ததால் பயத்தில் சாக்கடை கால்வாய்க்குள் பதுங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹக்கீமை கைது செய்தனர். மேலும் ஏற்கனவே பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஹக்கீம் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.