பள்ளத்தில் தவறி விழுந்த குட்டியானை
தேவாலா அருகே பள்ளத்தில் தவறி விழுந்த குட்டியானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்த்தனர்.
கூடலூர்
தேவாலா அருகே பள்ளத்தில் தவறி விழுந்த குட்டியானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்த்தனர்.
பள்ளத்தில் விழுந்த குட்டியானை
கூடலூர் அருகே தேவாலா-நாடுகாணி வனப்பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தன. திடீரென காட்டுயானைகளின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தேவாலா-நாடுகாணி வனச்சரகர் பிரசாத் தலைமையிலான வனத்துறையினர் அந்த வனப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ஆங்கிலேயர் கால தங்க சுரங்க பகுதியில் உள்ள சுமார் 12 அடி ஆழ பள்ளத்தில் குட்டியானை தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. ஆனால் அங்கு தாய் யானை உள்பட மற்ற யானைகள் இல்லை.
தாயிடம் அழைத்து சென்றனர்
இதையடுத்து பள்ளத்தில் தவித்த குட்டி யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பள்ளத்தின் கரையில் மண்ணை வெட்டி எடுத்து, குட்டியானை வெளியே வர வழி ஏற்படுத்தினர். தொடர்ந்து பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு குட்டியானை பள்ளத்தில் இருந்து வெளியே வந்தது. உடனே அதற்கு வனத்துறையினர் குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வழங்கினர்.
பின்னர் குட்டியானையை தாய் யானையுடன் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அங்கு பதிவாகி இருந்த மற்ற யானைகளின் கால் தடங்களை பின்தொடர்ந்து சென்று வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சற்று தொலைவில் அவை நிற்பது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அங்கு குட்டியானையை அழைத்து சென்றனர்.
வனத்துறையினர் நெகிழ்ச்சி
குட்டியை கண்டதும் தாய் யானை பாசத்துடன் வேகமாக ஓடி வந்தது. மேலும் வனத்துறையினரை விரட்டியது. உடனே வனத்துறையினர் குட்டியை விட்டுவிட்டு தப்பி ஓடினர். தொடர்ந்து தாய் யானை குட்டியை துதிக்கையால் தழுவி அழைத்து சென்றது. இந்த காட்சியை தொலைவில் நின்றபடி வனத்துறையினர் நெகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து வனச்சரகர் பிரசாத் கூறும்போது, பள்ளத்தில் தவறி விழுந்தது பிறந்து 1 மாதமே ஆன பெண் குட்டியானை. அதை மீட்டு தாயுடன் சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.