பலத்த மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பலத்த மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அகற்றப்பட்டன.

Update: 2021-10-06 14:35 GMT
குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பலத்த மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அகற்றப்பட்டன. 

தொடர் மழை

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அதன்படி கடந்த ஒரு வாரமாக குன்னூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சாலைகள் மற்றும் ரெயில் பாதையில் மரங்கள் விழுதல், பாறைகள் உருண்டு விழுதல், மண்சரிவு ஏற்படுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில்  பலத்த மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் அருகே சுமார் 150 அடி உயர மலையில் இருந்து 4 பாறைகள் உருண்டு விழுந்தன. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 இது தவிர அதே சாலையில் லாஸ்பால்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று, சாலையில் விழுந்த பாறைகளை ெபாக்லைன் எந்திரம் மூலம் உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சரிந்து கிடந்த மண் ணும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.  

மரம் விழுந்தது

நேற்று காலை 7.10 மணியளவில் குன்னூர்-ஆடர்லி சாலையில் கரன்சி அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆடர்லியில் இருந்து குன்னூருக்கு வரும் அரசு பஸ் நிறுத்தப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சனெ்று, மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு அந்த வழியே போக்குவரத்து சீரானது. 
இதற்கிடையில் காலதாமதம் ஏற்பட்டதால், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்தே குன்னூருக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்