உத்தரபிரதேச சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க கூடாது - கோவையில் அண்ணாமலை பேட்டி
உத்தரபிரதேச சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க கூடாது என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை,
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவர் மகேஷ் தலைமையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பல்வேறு அமைப்புகளில் இருந்த இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் நடந்தது துயர சம்பவம். அந்தமாநில முதல்-மந்திரி இதற்கு காரணமானவர்களை யாராக இருந்தாலும் விட மாட்டோம் என சொல்லி உள்ளார். அரசு வேலை, இழப்பீடு உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த காரை ஓட்டியவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-மந்திரி கூறி உள்ளார். இதைஎதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயியும் தமிழகத்தில் போராட்டத்தை முன்வெடுக்கவில்லை. இந்திய அளவில் எதிர்க்கட்சி, தமிழக அளவில் ஆளுங்கட்சியான தி.மு.க. அகில இந்திய பந்த் போராட்டத்துக்கு அழைப்பிற்கு விடுத்தபோது கூட, எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். பஞ்சாப், அரியானா, சில விவசாய சங்கங்கள் பிரதமர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் தான் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
விவசாய சட்டங்களில் இதனால் பாதிப்பு என குறிப்பிட்டு சொன்னால் மாற்ற அரசு தயாராக உள்ளது எனக்கூறியும், யாரும் எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை என பிரதமர் பேட்டி அளித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கூட வேளாண் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ள போதும், ஏன் போராட்டம் நடைபெறுகிறது என கேள்வி எழுப்பி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.
பெண்களுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கியில் தங்க நகை கடன் தள்ளுபடி என அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இந்த அரசு பாடுபடவில்லை. கூடலூரில் புலி விவகாரத்தை பொருத்தவரை அறிவியல் ரீதியாக அணுக வேண்டும். வனத்துறையின் முடிவு சரியானதாக இருக்கும். 7-ந் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் கோவில்களில் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.