திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி சாவு

திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து வடமாநில தொழிலாளி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2021-10-06 03:56 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு சமத்துவபுரம் பகுதியில் தனியார் கம்பெனி உள்ளது. பீகார் மாநிலம் புஜபார்பூரா பகுதியை சேர்ந்த தனேஷ்யவர் பண்டிட் (வயது 38). இவர் சக தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் தங்கி கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி அன்று தனேஷ்யர் பண்டிட் தன்னுடைய அறையில் தூங்கி கொண்டிருந்தார். 

அப்போது அருகில் முட்புதரில் இருந்து வந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதை பார்த்த உடன் இருந்த அவரது சகோதரர் உள்பட சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்