பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 2 பேருக்கு வலைவீச்சு
இறப்பு சான்றிதழ் தராத ஆத்திரத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த தண்ணீர் குளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக கஸ்தூரி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தயாளன், சீனிவாசன் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளனர். பின்னர் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு அவர்கள் பெண் கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரியை தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து அவர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தையால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்ற தயாளன், சீனிவாசன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.