நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நெல்லை:
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை
தமிழகத்தில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதேேபால் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதே போல் தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.
நெல்லையில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அவ்வப்போது வெயில் அடித்தது. மாலையில் மேக கூட்டங்கள் திரண்டு ரம்மியமாக காட்சி அளித்தது. அதை தொடர்ந்து ராமையன்பட்டி உள்பட சில இடங்களில் பலத்த மழையும், பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்தது. பணகுடியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல் மூட்டைகள் நனைந்தன
சேரன்மாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மேலச்செவல், பத்தமடை, கங்கணான்குளம், காருக்குறிச்சி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மழை பெய்ததால் நெல் மூட்டைகள் நனைந்தன.
மேலும் பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் அணை-12, சேர்வலாறு -8, மணிமுத்தாறு -1, நம்பியாறு -40, அம்பை -4, சேரன்மாதேவி -6.
கடனா அணை-15, ராமநதி அணை-20, கருப்பாநதி -34, குண்டாறு -5, அடவிநயினார் அணை-60, ஆய்க்குடி -17, செங்கோட்டை -5, தென்காசி -8, சங்கரன்கோவில் -6, சிவகிரி -4.