மருதுபாண்டியர் குருபூஜை விழாவை நடத்த அனுமதி கோரி வழக்கு
மருதுபாண்டியர் குருபூைஜ விழாவை நடத்த அனுமதி கோரிய வழக்கில் விருதுநகர் கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மதுரை,
மருதுபாண்டியர் குருபூைஜ விழாவை நடத்த அனுமதி கோரிய வழக்கில் விருதுநகர் கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மருதுபாண்டியர் குருபூஜை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைச் சேர்ந்த மங்கை மணிவிழி நாச்சியார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை சீமையை ஆட்சி செய்த மருதுபாண்டியர்களின் வாரிசு நான். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 27-ந்தேதியன்று மருதுபாண்டியர் குருபூஜையை கொண்டாடி வருகிறோம். மருதுபாண்டியர் வாரிசுகளான நாங்கள் நரிக்குடியில் 300 குடும்பங்களாகவும், இதை சுற்றியுள்ள 5 கிராமங்களிலும், வெளியூர்களிலும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மருது சகோதரர்கள். அவர்களின் நினைவாக வருகிற 27-ந்தேதியன்று நரிக்குடியில் உள்ள தொடக்கப்பள்ளி, உதவி கல்வி அலுவலகம் உள்ள இடத்தில் குருபூஜை விழா நடத்த உள்ளோம்.
பதில் அளிக்க உத்தரவு
கடந்த சில ஆண்டுகளாக இந்த விழாவை, ஐகோர்ட்டு உத்தரவை பெற்று நடத்தி வருகிறோம். எனவே இந்த ஆண்டும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவுக்கு அனுமதிக்கவும், அன்றைய தினம் அங்குள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு குறித்து விருதுநகர் கலெக்டர் பதில் அளிக்கும்படி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.