நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 4 ஆயிரம் பேர் இந்திய ஆட்சி பணிக்கு நியமனம் - குமாரசாமி பரபரப்பு தகவல்

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 4 ஆயிரம் பேர் இந்திய ஆட்சி பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

Update: 2021-10-05 20:49 GMT
பெங்களூரு:

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்திய ஆட்சி பணி

  நாட்டில் அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் உயர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சி பணியில் அந்த அமைப்பை சேர்ந்த 4,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 626 பேர் இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்றனர். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது.
  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

  இதற்கு பதிலளித்துள்ள பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி., "குமாரசாமி தனது பேரக்குழந்தைகளை வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்க்கட்டும். நாங்கள் அவர்களுக்கு பயிற்சி வழங்கி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆக்குகிறோம்" என்றார். இந்த நிலையில் இந்திய ஆட்சி பணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சேர்ந்துள்ளதாக கூறியது குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள குமாரசாமி கூறியதாவது:-

உயிர்த்தியாகம் செய்தவர்கள்

  நான் எந்த கட்சி குறித்தோ அல்லது அமைப்புகள் குறித்தோ தவறாக பேசவில்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் நான் பல்வேறு புத்தகங்களை படித்தேன். வரலாற்று அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தேன். அந்த புத்தகங்களில் கூறியுள்ள சில தகவல்களை தான் நான் இன்று (நேற்று) கூறியுள்ளேன்.

  நாடு தற்போது சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும்போது, அந்த கருத்தை கூற வேண்டும் என்று நான் நினைத்தேன். நாட்டில் உண்மையாக என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியவில்லை. உண்மையை மூடிமறைத்தால், அது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை அவமதித்தது போன்றது ஆகும். மக்களுக்கு உண்மையை தெரிய வேண்டும். உண்மையை சொல்ல எனக்கு எந்த தயக்கமோ, பயமோ இல்லை. நான் யாருக்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ இந்த கருத்தை கூறவில்லை. உண்மை பற்றி மக்கள் விவாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் எப்போதும் உண்மையின் பக்கம் இருக்கிறேன்.
  இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்