கருவேலமரங்கள் ஆக்கிரமித்த ஏரி
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடு போன்று காட்சி அளிக்கிறது. எனவே ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியில் மழைக்காலம் என்பதால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கி.செந்தில்குமார், அக்ரஹார நாட்டார்மங்கலம், சேலம்.
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
சேலம் மாவட்டம் தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் மேட்டூரில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகின்றனர். தாரமங்கலம்- மேட்டூருக்கு 32 மற்றும் 37 எண் கொண்ட 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் காலை, மாலை நேரங்களில் மாணவ- மாணவிகளின் வசதிக்கு ஏற்ப பஸ்கள் வருவது இல்லை. இதனால் ஒரே நேரத்தில் அதிக பயணிகள் ஒரு பஸ்சில் பயணம் செய்வதால் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கிறது. இதுதவிர பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ- மாணவிகள் பயணம் செய்வதால் ஏதும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே தாரமங்கலம்- மேட்டூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரா.சதீஷ், தாரமங்கலம், சேலம்.
ஆத்தூரில் இருந்து கெங்கவல்லி வழியாக கடம்பூருக்கு 3 தனியார் பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. தற்போது கொரோனா பிரச்சினையால் அந்த 3 பஸ்களும் வருவதில்லை. வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வழித்தடத்தில் அரசு போக்குவரத்து துறை கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.ரவிசங்கர், கெங்கவல்லி,
திறப்பு விழா காணாத சேவை மைய கட்டிடம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. திறப்பு விழா காணாத இந்த கட்டிடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடத்தை திறந்து சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-வெங்கடேஷ், சந்திரசேகரபுரம், நாமக்கல்.
கழிப்பிடம் திறப்பது எப்போது?
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம் சுமார் 6 மாத காலம் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுக்கழிப்பிடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்சித், கீழ்முகம், சேலம்.
பயணிகள் நிழற்கூடம்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருப்போர் வெயில் மற்றும் மழைக்காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும் அங்குள்ள மரத்தின் கீழ் நின்று பஸ் ஏறுகின்றனர். எனவே இந்த பகுதியில் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.சரவணன், கரிக்காப்பட்டி, சேலம்.
===
வேகத்தடை அமைக்க வேண்டும்
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டன. இதனால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. குறிப்பாக இலக்கியம்பட்டி பகுதியில் தினமும் ஏதாவது ஒரு விபத்து நடக்கிறது. எனவே அந்த பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-அர்ஜுன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜக்கசமுத்திரம்- பொம்மனூர் செல்லும் தார் சாலையில் அரசு மருத்துவமனை அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையம் நியாயவிலைக் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த ஜக்கசமுத்திரம்-பொம்மனூர் செல்லும் தார் சாலையில் வேகத்தடை கூட இல்லை. எனவே அந்த பகுதியில் சிறு சிறு வேகத்தடைகள் அமைத்து தர வேண்டும்.
ஊர்மக்கள், ஜக்கசமுத்திரம், தர்மபுரி.
நல்ல குடிநீர் கிடைக்குமா?
சேலம் மாவட்டம் பண்ணபட்டி ஊராட்சி மாரகவுண்டர் புதூரில் ஏ.டி. காலனி பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் வசதி இல்லாமல் இருக்கிறது. அருகில் உள்ள ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறார்கள். உப்பு தண்ணீர் குடிப்பதால் ஒருசிலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எப்போதுதான் நல்ல குடிநீர் குடிக்க போறோம்? என்று அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக ஏக்கமாக உள்ளனர். எனவே அந்த பகுதியில் நல்ல குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்மக்கள், பண்ணபட்டி, சேலம்.
சாக்கடை கால்வாய் வேண்டும்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் நத்தக்காடு தெருவில் சாக்கடை கால்வாய் இல்லாமல் சுமார் 5 ஆண்டுகளாக பெரும் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் மழைநீருடன், கழிவு நீரும் கலந்து வெளியே செல்லாமல் தெருவில் தேங்கி நின்று விடுகின்றன. இதனால் கொசுக்கள் அதிகமாகி தொல்லையாக இருக்கின்றன. இதன்மூலம் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், நத்தக்காடு, நாமக்கல்.