புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
மேடு, பள்ளமாக சாலை
மதுரை தானப்பமுதலி தெரு பகுதிகள் மேடு, பள்ளங்களாக உள்ளன. இருசக்கர வாகனங்கள் செல்லும் போது தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே அங்கு தரமான சாலை அமைத்து தர வேண்டும்.
-அன்புமணி சுந்தரராசன், மதிச்சியம்.
தொலைதூர பஸ்கள் நிற்குமா?
மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் நான்கு வழிச்சாலை போட்ட பின்னர் காரியாபட்டி ஊருக்குள் வராமலும் பை-பாஸ் சாலையில் நிற்காமலும் செல்கின்றன. இதனால் அங்குள்ள பயணிகள் தூத்துக்குடி, திருச்செந்தூர் சென்று வர மண்டேலா நகர் செல்ல வேண்டியுள்ளது. எனவே காரியாபட்டி பை-பாஸ் சாலையில் (கள்ளிக்குடி விலக்கில்) பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயச்சந்திரன், காரியாபட்டி.
நிழற்குடை தேவை
விருதுநகர் அருகே பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெயில், மழையானாலும், பயணிகள் அந்த பஸ் நிறுத்தத்தில் பொறுமையாக நின்று பஸ்களில் ஏற வேண்டி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பூசாரிபட்டி பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-கோ.உமையலிங்கம், விருதுநகர்
மின்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பிரண்டைக்குளம், சீனிக்காரனேந்தல் கிராமங்களில் மின்வினியோகம் குறைந்த அழுத்தத்தில் வருகிறது. ஊரின் அருகில் 500 மீட்டர் தூரம் வரை 3 மும்முனை மின்வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கிராமத்தில் மின்வினியோகம் சரியாக இல்லை.. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. முறையாக குடிநீர் கூட கிடைப்பதில்லை. பல ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. எனவே கிராமத்தில் மின்தட்டுப்பாட்டை போக்க மும்முனை மின்சாரம் கிடைக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
-சதீஷ்குமார், பிரண்டைக்குளம்.
தேங்கி நிற்கும் மழைநீர்
மேலூர் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மனு கொடுக்க வருபவர்கள் இந்த மழைநீரை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இந்த வளாகத்தில் நீதிமன்றங்கள், சிறைசாலை, மேலூர் காவல் நிலையங்கள், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், வழக்கறிஞர் சங்கம், நீதிபதிகள் மற்றும் வட்டாச்சியர் இல்லங்கள், இலவச சட்ட உதவி மையம், வட்டார தீயணைப்பு நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. தினமும் ஏராளமான பொது மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், மேலூர்.
பஸ்வசதி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல பஸ் வசதி இல்லை. அத்துடன் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல சாலை வசதியும் இல்லை. எனவே பஸ்வசதியும் சாலை வசதியும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கவுரிநாதன், வாடிப்பட்டி.
தொற்றுேநாய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் பேரையூரில் ரஹ்மத்நகர் 1- வது தெருவில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரமற்ற சூழ்நிலை உள்ளது. மேலும் ெதாற்றுநோய் ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் மழைநீரை வெளியேற்ற வேண்டும்.
-அப்துல்ரஹிம். பேரையூர்.
தெருவிளக்குகள் ஒளிருமா?
மதுரை மகால் அருகில் உள்ள பந்தடி 1 முதல் 5 வரை தெருவிளக்குகள் எரிவதில்லை. மின் அலுவலகத்தில் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அந்த பகுதியே இருளில் மூழ்கி உள்ளது. எனவே உயர் அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கு வெளிச்சத்தை தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவா,மதுரை.
குடிநீர் இணைப்பு தேவை
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விரிவாக்க பணி முடிந்தும் இன்னும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கருப்பாயூரணி.