இருசக்கர வாகன ரோந்து மூலம் குற்றவாளிகள் கண்காணிப்பு

இருசக்கர வாகன ரோந்து மூலம் குற்றவாளிகள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-05 20:12 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் இருசக்கர வாகன ரோந்து போலீஸ் படை செயல்படுகிறது. இந்த போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் ரோந்து போலீசாரின் வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் திண்டுக்கல்லில் இருசக்கர ரோந்து வாகன எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகன ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகள் வழியாக போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி போலீஸ்காரருடன் ரோந்து சென்றார்.
இதையடுத்து ரோந்து போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு அறிவுரைகள் வழங்கினார். அப்போது இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் போலீசார் குற்ற நிகழ்விடத்துக்கு விரைவாக செல்ல வேண்டும். மேலும் குற்றங்கள் தொடர்பான தகவலை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் சமூக விரோத செயல்களை தடுக்க குற்றவாளிகளின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். மேலும் சாலை விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களுக்கு உடனே செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில் அந்த பகுதிகளில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். 24 மணி நேரமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்