தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று மதனத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து மொபட்டில் மணல் ஏற்றி வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, மொபட்டை விட்டு விட்டு அவர் தப்பி ஓடி விட்டார். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், மணல் ஏற்றி வந்தவர் தா.பழூரை அடுத்த மதனத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபாலின் மகன் குணசேகரன்(வயது 35) என்பதும், மொபட்டில் 4 மூட்டைகளில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மொபட்டை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய குணசேகரனை தேடி வருகிறார்.