உணவு பாதுகாப்புத்துறை உரிமத்தை போலியாக தயாரித்த 2 பேர் கைது
திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறை உரிமத்தை போலியாக தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
திருச்சி
திருச்சி தென்னூர் ஹைரோட்டில் எஸ்.என்.டவர் 2-வது மாடியில் செயல்பட்டு வந்த நியூட்ரிசன் சென்டர் நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறையின் உரிமத்தில் கையொப்பம் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபுவிடம் மனு அளிக்கப்பட்டது. அவர் அந்த உரிமத்தை ஆய்வு செய்தபோது, அது மேற்கு வங்காளத்தில் செயல்பட்டு வரும் ஒரு சில்லறை விற்பனை கடையின் உரிமம் என்பதும், அந்த கடையின் உரிம எண்ணை பயன்படுத்தி பெங்களூருவில் இருந்து போலி உரிமம் தயாரித்து வாங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி போலி உரிமம் தயாரித்த திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சீதேவி மங்கலத்தை சேர்ந்த புவனேஷ்வர் (வயது 41), அரியமங்கலம் நேருஜீநகரை சேர்ந்த பாஸ்கர் (50) மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து, புவனேஷ்வர், பாஸ்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், தென்னூரில் ஹைரோட்டில் செயல்பட்டு வந்த நியூட்ரிசன் சென்டர் நிறுவனத்துக்கு உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.